கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, நீதிபதிகளை அச்சுறுத்துவதாகக் கூறப்படுவது தி.மு.க. அல்ல என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். இந்தியாவில் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு மட்டுமே நிபந்தனைகளைத் தளர்த்தி, விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோருக்குத் தொகையை வழங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்., பணி) 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வாக்காளர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வுக்கே வாக்களிப்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் ரகுபதி, “நீதிபதியை அச்சுறுத்தும் இயக்கம் தி.மு.க. அல்ல. தி.மு.க.வினர் எப்போதும் நீதியை மதிக்கக்கூடியவர்கள். அதனால், யாரையும் அச்சுறுத்த மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.மலை உச்சியில் இருப்பது குறித்து அவர் மேலும் கூறியதாவது “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வைக்கப்பட்டது சர்வே கல் மட்டுமே. அங்கே தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும், தமிழக அரசு ஆன்மிகத்துக்குப் புத்துணர்வு அளித்து வருவதாகவும், யாரையும் நசுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியே கலகலத்துப் போயுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரைச் சந்தித்துப் பேசுவதால் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலைக் கூட உருவ முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும், பா.ஜ.க.வுக்குத் தோல்விதான் மிஞ்சும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

















