திமுக அரசு சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது ; தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் – அன்புமணி விமர்சனம்

சென்னை : தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதற்கான கடுமையான பதிலை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பார்வை மாற்றுத்திறனாளி உட்பட இருவர் கஞ்சா போதை கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை துல்லியமாக காட்டுகிறது. மேலும், கஞ்சா விற்பனை எவ்வளவு விஸ்தரித்துவிட்டது என்பதற்கும் இது கொடூரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அவர் கூறியதாவது :
தூத்துக்குடி தெர்மல் நகரம் அருகே உள்ள பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது வீட்டின் கதவை கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு, கஞ்சா போதை கும்பல் தட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவரது மகனும் பார்வை மாற்றுத் திறனாளியுமான மாரிப்பாண்டி மற்றும் மற்றொரு மகன் அருள்ராஜ் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த நாள் காலை முதல் இருவரும் காணாமல் போனதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் உடல்கள் அருகிலுள்ள கால்வாயில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இந்தக் கொடூரச் செயலை கஞ்சா போதை கும்பலே நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், “தமிழகத்தில் கஞ்சா விற்பனையையும், அதனைச் சார்ந்த கொலைகளையும் காவல்துறை தடுக்க முடியாத அளவுக்கு சீரழிந்துவிட்டது. இதற்கு அதிகாரம் வாய்ந்த யாரோ ஒருவரின் ஆதரவு இருப்பதால்தான் குற்றவாளிகள் தடையின்றி செயல்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

மேலும், “காவல்துறையை நேரடியாகக் கண்காணிக்கும் முதல்வர் ஸ்டாலின் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் அரசும், காவல்துறையும் உள்ளனவா என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, “சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டத் தயாராக இருக்கின்றனர்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

Exit mobile version