கோவை மாவட்டம் பொன்னே கவுண்டன் புதூரில், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு மற்றும் திமுகவின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான புகார்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய சீர்திருத்தங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டவை. குறிப்பாக, வேலை இல்லாத காலங்களில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தத் திருத்தங்கள் அமையும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்கியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். “திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நூறு நாள் வேலைத் திட்ட நிதியைத் திமுக அரசு முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமி தனது தொகுதியில் இந்தத் திட்டத்தை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் வெளிப்படைத்தன்மை கொண்ட திருத்தங்களை ஏற்றால் தங்களின் ஊழல் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தாலேயே திமுக இத்திட்டத்தை எதிர்க்கிறது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், அன்னூர் அருகே அண்மையில் நடைபெற்ற திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்துப் பேசுகையில், “அரசியல் ஆதாயத்திற்காக மூதாட்டிகளை மிரட்டி ஆர்ப்பாட்டத்திற்கு வரவழைத்த திமுகவின் நாடகத்தால் இன்று ஒரு உயிர் பலியாகியுள்ளது. வெயிலில் நிற்க வைத்து மூதாட்டியைப் பலிவாங்கிய திமுக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசுகையில், கள்ள ஓட்டுப் போடுவதில் நிபுணத்துவம் பெற்ற திமுகவினர், முறையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பைக் கண்டு அஞ்சுவதாகவும், அதனாலேயே திருத்தப் பணிகளை எதிர்ப்பதாகவும் நாகராஜ் சாடினார். இந்த நிகழ்வில் பா.ஜ.க. வடக்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, விவசாய அணி மாவட்டத் தலைவர் வெள்ளியங்கிரி, மாநிலச் செயலாளர் மணிகண்டன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் அறிவுசார் பிரிவு மாநிலச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
