கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைணவத் திருத்தலங்களின் மிக முக்கியமான விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ‘திருமொழித் திருநாள்’ என்று அழைக்கப்படும் பகல் பத்து உற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, மூலவர் ரங்கநாத சுவாமி மற்றும் உற்சவருக்கு நறுமணப் பொருட்கள், பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பெருமாள் வண்ண மலர்களாலும், திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கரூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா’ முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, வரும் டிசம்பர் 29-ஆம் தேதி சுவாமி ‘மோகினியார் அலங்காரத்தில்’ நாச்சியார் திருக்கோலத்துடன் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘பரமபத வாசல்’ எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4:00 மணி முதல் 4:30 மணிக்குள் ரங்கநாத சுவாமி பரமபத வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்தல், குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சொர்க்கவாசல் திறப்பினைத் தொடர்ந்து ‘இராப்பத்து’ உற்சவம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
