மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும், உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும் விளங்கும் நாகூர் தர்காவிற்கு, நாள்தோறும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி வருகை தருகின்றனர். தமிழகச் சுற்றுலாத் வரைபடத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள நாகூரில், பக்தர்களின் வசதிக்காகவும், அவசர காலத் தேவைகளுக்காகவும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் (ஹெலிபேட்) அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. நாகூர் கடற்கரை அருகே தர்காவிற்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலம் காலியாக உள்ள நிலையில், அந்த இடத்தில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஹெலிபேட் வசதியை ஏற்படுத்தித் தந்தால், அது சர்வதேசப் பயணிகளுக்கும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் நிறுவனம் சார்பில் நாகூர் தர்காவிற்குப் பக்தர்களின் பயன்பாட்டிற்காகப் பேட்டரி கார் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த வசதியை மாவட்ட ஆட்சியர் முறைப்படி தொடங்கி வைத்த போதிலும், தர்காவைச் சுற்றியுள்ள சாலைகள் சீராக இல்லாத காரணத்தால் அந்தப் பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது வேதனையான விஷயமாக உள்ளது. தற்போது தர்காவைச் சுற்றியுள்ள ஒரு சில வீதிகளுக்கு மட்டுமே சாலைப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தப் பேட்டரி கார் இயக்கத்திற்குப் போதுமானதாக இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தர்காவிலிருந்து கடற்கரை செல்லும் செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு மற்றும் ரயில் நிலையம் செல்லும் மணவரா வடபுறம் தெரு உள்ளிட்ட முக்கியச் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதே இந்தத் தடையற்குக் காரணமாகும்.
இது குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ள நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும், முஹல்லி முத்தவல்லியுமான ஹாஜி எஸ். செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி, “பக்தர்களின் நலன் கருதி கிழக்கு வாசலில் இருந்து குளத்தடி தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், கடைத்தெரு வழியாகப் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அப்போதுதான் பேட்டரி கார்களைத் தடையின்றி இயக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். ஆன்மிகச் சுற்றுலாத் தலமான நாகூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், பக்தர்களின் பாதுகாப்பிற்கும் மிக அவசியமான ஒன்றாகும். எனவே, தமிழக அரசு தனது அடுத்தடுத்த நலத்திட்ட அறிவிப்புகளில் நாகூருக்கான ஹெலிபேட் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
