திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான கிருஷ்ணனின் பேரனும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் மகனுமான கவின்குமாரை கடந்த மாதங்களில் திருமணம் செய்தார்.

திருமணத்திற்குப் பிறகு 78 நாட்கள் ஆன நிலையில், ரிதன்யா சேவூர் சாலையில் தனது காரில் தென்னை மரப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன், தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோவில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் சித்ரவதை செய்ததாகவும், அதனால் உயிரிழப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியன. இதையடுத்து மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், ரிதன்யாவின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இரு தரப்பும் வாதங்களை முன்வைத்த நிலையில், நீதிபதி குணசேகரன், கவின்குமாரும் ஈஸ்வரமூர்த்தியும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மாமியார் சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுவை தனியாக தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யா தரப்பின் வழக்கறிஞர் சி.பி. சுப்பிரமணியம்,
திருமணமாகி 78 நாட்களில் ரிதன்யா உயிரிழந்துள்ளார். அவரது ஆடியோ பதிவு முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆடியோவின் அடிப்படையில், தற்போது வழக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது. உடற்கூறாய்வு மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை முடிவுகள் வரும்போது, உண்மையான நீதியை பெற முடியும்,” என்று கூறினார்.















