இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகளை சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை இந்தியா மறைமுகமாக ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். இதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளின் மீதும் வரி உயர்த்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவசரகால அதிகார சட்டத்தின் பெயரில் ட்ரம்ப் எடுத்த இந்த வரி உயர்வு முடிவுகள் சட்டவிரோதமானவை என தீர்ப்பு அளித்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. “இந்த வரிகள் அதிகப்படியானவை அல்ல; மாறாக, உக்ரைனில் அமைதியை நிலைநிறுத்தும் நோக்கத்திலேயே எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை” என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.