ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து ராமநாதபுரத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் (MGNREGA) சிதைக்க மத்திய அரசு முயல்வதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், விவசாயம் இல்லாத காலங்களில் கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய பாஜக அரசு இத்திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்துள்ளதோடு, உச்சரிக்கக் கடினமான புதிய பெயரைச் சூட்டியுள்ளதாகக் கரு.மாணிக்கம் சாடினார். மேலும், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் பயனாளிகளைத் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசே தன் வசம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், போதிய நிதி ஒதுக்காமல் இத்திட்டத்தை முடக்கச் சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த நிலையை எதிர்த்து, இன்று காலை 10 மணி முதல் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், மாணிக் தாகூர் எம்.பி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, “காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதால்தான் நிர்வாகிகள் தங்களது கருத்துக்களைத் தாராளமாக வெளிப்படுத்துகின்றனர்; அந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு அளிப்பதும் அந்த ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியே” என அவர் விளக்கமளித்தார். மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக போட்டியிட விரும்புவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ள கருத்து குறித்துப் பதிலளித்த அவர், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கூடி இறுதி முடிவை அறிவிப்பார்கள் என்றும், தான் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் நிதானமாகப் பதிலளித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் பேசுகையில், 2005-ல் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் இன்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் கருவியாக மாற்றப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். நிகழ்வில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், மாவட்டத் துணைத் தலைவர் காமராஜ், நகர் தலைவர் கோபி, வட்டாரத் தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ராணுவப் பிரிவுத் தலைவர் கோபால் மற்றும் அபிராமம் பேரூர் தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ராமநாதபுரம் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















