கோவை மாவட்டம் அன்னூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோயிலின் 26-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 31-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கண்கவர் தெப்ப உற்சவமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. இந்த விழாவானது இப்பகுதி மக்களின் நீண்ட கால ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
இரவு நடைபெற்ற விசேஷ வழிபாட்டின் போது, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவினை முன்னின்று நடத்திய கட்டளைதாரர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயில் நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் (தெப்பக்குளம்) சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். மின்னொளியில் ஜொலிக்கும் வசந்த மண்டபத்தை சுவாமி வலம் வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த பக்தர்களைப் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் “மன்னீஸ்வரருக்கு அரோகரா” என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணதிரும் வகையில் அமைந்தது.
இந்த வைபவத்தில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களும், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்திற்குப் பிறகும் பக்தர்களின் கூட்டம் குறையாமல், இந்த தெப்ப உற்சவம் அன்னூர் நகரையே விழாக்கோலத்தில் ஆழ்த்தியது. விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளை அன்னூர் காவல்துறையினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.













