மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘தி கனெக்ட்’ (இணைப்பு) அமைப்பின் சார்பில், இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மதுரை வளர்ச்சி குறித்த பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகர் சூரி, தனது திரையுலகப் போராட்டங்களையும், தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கதையையும் பகிர்ந்து கொண்டு மாணவர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். “வாழ்க்கையில் அடிபட்டு ஜெயித்தவனிடம் இருக்கும் தெளிவு, வெறும் ஆசைப்பட்டு ஜெயித்தவனிடம் இருக்காது” என்று அவர் குறிப்பிட்டது அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூரி, தான் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, தந்தை சேர்த்துவிட்ட டீக்கடையில் பணிபுரிந்ததையும், பின்னர் சினிமா கனவோடு சென்னை சென்று சுமார் 8 ஆண்டுகள் பெயிண்டராகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றியதைக் குறிப்பிட்டார். “வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு டீ குடித்தால் கூட போட்டோ பிரின்ட் எடுக்கப் பணம் இருக்காது; அந்த அளவிற்கு வறுமையைச் சந்தித்தேன். ஒருமுறை பட வாய்ப்பு கிடைத்து ஆடை மாற்றச் சொன்ன பிறகு, வேறொருவரைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறி கழற்றச் சொன்னபோது உடைந்த உள்ளத்தோடு நின்றேன். அஜித்தின் ‘ஜி’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயம் மற்றும் அவர் மதுரைக்காரர்களின் வேகம் குறித்துச் சொன்ன வார்த்தைகளே எனக்கு நம்பிக்கையைத் தந்தது,” என்று அவர் விவரித்தார். தான் ஒருமுறை வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த அதே கட்டிடத்தை இன்று விலைக்கு வாங்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதாகக் கூறிய அவர், அவமானங்களுக்குப் பதில் சொல்லாமல் உழைப்பால் உயருமாறும், குடும்ப உறவுகளைக் கைபேசிக்காக விட்டுவிட வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக, வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் பேசுகையில், பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், பலருக்கு வேலை வழங்கும் தொழில்முனைவோராக உயர வேண்டும் என்ற நோக்கிலேயே ‘இணைப்பு’ அமைப்பு உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகரித்தால் மட்டுமே தென் தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி அடையும் என்றும், இதற்காக மாணவர்கள் டெல்லி வரை எதிரொலிக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போன்ற நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி ஜுவல்லரி அனந்த பத்மநாபன், தங்கமயில் ஜுவல்லரி ரமேஷ், பொன் பியூர் கெமிக்கல்ஸ் பொன்னுசாமி மற்றும் அம்மா மெஸ் செந்தில்வேல் உள்ளிட்ட முன்னணித் தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு, இன்றைய சவாலான சூழலில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
