கோவையில் பிப்ரவரி 22-ல் ஜெம் அறக்கட்டளையின் பிரம்மாண்ட மகளிர் மாரத்தான் லோகோவை வெளியிட்டார் மாநகர ஆணையர்

கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான நிதி திரட்டும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜெம் (GEM) அறக்கட்டளை சார்பில் ‘மகளிர் மாரத்தான்’ போட்டியின் 3-வது பதிப்பு வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினை (Logo) மற்றும் டி-சர்ட் அறிமுக விழா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் இந்தச் சிறப்பு இலச்சினையை வெளியிட்டு, மாரத்தான் போட்டிக்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் (TNAA) அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் இந்தப் போட்டி, பிப்ரவரி 22 அன்று காலை 5.30 மணிக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்குகிறது. கடந்த 25 ஆண்டுகளாகச் சமூக சேவையில் தடம் பதித்து வரும் ஜெம் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்புகளுடன் இணைந்து ஏற்கனவே 100 நோயாளிகளுக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்தர அறுவை சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாகச் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த மாரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோய் சிகிச்சைக்காகச் செலவிடப்பட உள்ளது.

இந்தப் போட்டி 3 கி.மீ, 5 கி.மீ, 10 கி.மீ மற்றும் 21 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. 3 கி.மீ ஓட்டம் புலியகுளம் மற்றும் நிர்மலா கல்லூரி வழியாகவும், 5 கி.மீ ஓட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சுற்றியும், 10 கி.மீ ஓட்டம் திருச்சி ரோடு மற்றும் வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் வழியாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். மாரத்தான் தொடங்கும் அதே ஜெம் மருத்துவமனை வளாகத்திலேயே இலக்கை அடையும் வகையில் வழித்தடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் பேசிய ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி. பழனிவேலு மற்றும் செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் ஆகியோர், “பெண்கள் பகல், இரவு என எந்த நேரத்திலும் அச்சமின்றி நடமாடக்கூடிய பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்தனர். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்குத் தேவையான மருத்துவ முதலுதவி வசதிகள், குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். பெண்களின் சுய மேம்பாட்டையும், ஆரோக்கியத்தையும் வலியுறுத்தும் இந்த மாரத்தான், கோவை மாநகரின் ஒரு முக்கியச் சமூக விழிப்புணர்வு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version