கர்நாடக முதல்வர் சித்தராமையா மேடையில் அறைய முயன்றதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், அதனால் மனவிரக்தி அடைந்ததாக கூறும் ஏ.எஸ்.பி. நாராயண் பரமணி, விருப்ப ஓய்வு கோரி உள்துறைசெயலாளர் அலுவலகத்திற்கு ராஜினாமா மனுவை அனுப்பியுள்ளார். ஆனால், அவரது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, விலைவாசி உயர்வை கண்டித்துக் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா மேடையில் உரையாற்ற முயன்றார். அப்போது பா.ஜ.வின் பெண் ஆதரவாளர்கள் கத்தும் செயல்களால் குறுக்கீடு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முதல்வர், மேடையில் நின்றிருந்த ஏ.எஸ்.பி. பரமணியை அழைத்து, கடிந்து கொண்டு, கையை ஓங்கி அறைய முயன்றதாக கூறப்படுகிறது. பரமணி உடனடியாக பின்னே சென்று அந்தச் சூழ்நிலையைத் தவிர்த்ததாகவும், இந்த வீடியோவை 2 நாட்களுக்கு மேல் ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பியதால், அவரும் அவரது குடும்பத்தினரும் மாறாத மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் பரமணி கூறியிருப்பதாவது :
“முதல்வரால் மேடையில் அவமதிக்கப்பட்டதில் இருந்து, என் குடும்பம் கடும் மனவேதனையில் ஆழ்ந்தது. என் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். 31 ஆண்டுகள் நேர்மையாக சேவை செய்த எனக்கு இந்நிலையில் நீதி கிடைக்கவில்லையென்றால், பிறர் மீது எப்படி நீதியை நடைமுறைப்படுத்த முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கடுமையாக சாடியுள்ளன.
கர்நாடக பா.ஜ.க தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“முதல்வர் சித்தராமையாவின் சுய விளம்பர நிகழ்வின் போது, ஒரு நேர்மையான போலீசாரை அவமதித்ததன் விளைவாக அவர் விருப்ப ஓய்வு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இது ஆட்சி செய்பவரின் ஆணவத்தை வெளிப்படுத்துகிறது,” என பதிவிட்டுள்ளது.
அதே நேரத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம்,
“சித்தராமையாவின் ஆட்சி, ஜனநாயகத்தைக் கடந்து ஹிட்லரிசத்தை நினைவுபடுத்துகிறது,” என கடுமையாக விமர்சித்துள்ளது.