‘மேற்றலை தஞ்சாவூர்’ என்று ஆன்மீகப் பெருமையுடன் அழைக்கப்படுவதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுமான அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவிலின் 26-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கிராம தேவதை வழிபாட்டுடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொங்கு மண்டலத்தின் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழா இப்பகுதி மக்களின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாகும். நேற்று முன்தினம் கயிலை வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத மங்கலக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புளியம்பட்டி அறுபத்து மூவர் நற்பணி மன்றத்தினர் திருமுறை பாராயணம் பாட, சுவாமி முதல் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வாகன உலா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சூரிய வாகனத்தில் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் எழுந்தருளி, ஓதிமலை சாலை, சத்தி சாலை மற்றும் மெயின் ரோடு வழியாகத் திருவீதி உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர். தொடர்ந்து அன்று மாலை சந்திர வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். வரும் நாட்களில் பூத வாகனம் (டிச. 27), புஷ்ப பல்லாக்கு (டிச. 28) எனத் தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரவுள்ளார். வரும் 29-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் ஐம்பெரும் கடவுளரின் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சிகளாக வரும் 30-ஆம் தேதி காலை தேவார இன்னிசை முழங்க, 11:00 மணிக்குத் திருக்கல்யாண உற்சவம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அன்றிரவு யானை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மகா தேரோட்டம் வரும் 31-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7:15 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ என முழக்கமிடத் தேரோட்டமும் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.
















