மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசையும், அதற்குத் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து மதுரை மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 14 இடங்களில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது மற்றும் நிர்வாக மாற்றங்கள் மூலம் இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறைமுகமாக முயற்சிப்பதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர்.
மதுரை மாநகரின் முக்கியப் பகுதியான முனிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் திமுக நகர் செயலாளர் தளபதி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுசாமி, மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல், மதுரை தெற்கு திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் வழக்கறிஞர் நித்திய பிரியா, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்திஜி, விசிக செயலாளர் சிந்தனை வளவன், மதிமுக செயலாளர் மார்நாடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். உசிலம்பட்டியில் நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன், பழனி ஆகியோர் தலைமையில் எழுச்சியுடன் போராட்டம் நடைபெற்றது.
மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர் தலைவர் முகமது யாசின் தலைமை வகிக்க, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “தேசப்பிதாவின் பெயரில் இயங்கும் திட்டத்தைச் சிதைப்பது ஜனநாயக விரோதமானது” எனச் சுட்டிக்காட்டினார். சோழவந்தானில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன் மற்றும் நகர் செயலாளர் சத்யபிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, இ. கம்யூ. விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் ஜோதிராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தத் தொடர் போராட்டங்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

















