திமுக கொடி கட்டிய காரின் கோரத் தாண்டவம்: நிறைமாத கர்ப்பிணி பலியான சோகத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசம் – “அதிகார மமதையின் உச்சம்” என விளாசல்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடி கட்டிய கார் அதிவேகமாகச் சென்று மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “திமுக காரன் என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்து வரும் அராஜகங்கள் எல்லை மீறித் தொடர்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; இது தமிழகத்திற்குப் பெரும் ஆபத்தானது” என்று எச்சரித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தாயையும், இன்னும் சில நாட்களில் உலகைப் பார்க்கவிருந்த பச்சிளம் சிசுவையும் காவு வாங்கியுள்ள இந்தச் சம்பவம் நெஞ்சைக் கனக்கச் செய்வதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். “அத்தனை அகலமான தேசிய நெடுஞ்சாலையில், ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதும் அளவுக்குத் திமுகவினருக்குத் துணிச்சலும் அலட்சியமும் அதிகரித்துள்ளது அருவருப்பானது. அதிகார மமதையில் இன்னும் எத்தனை உயிர்களை இவர்கள் காவு வாங்குவார்களோ என்ற அச்சத்திலேயே தமிழக மக்கள் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் காட்டமாகச் சாடியுள்ளார்.

ஆட்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திமுகவினரின் இத்தகைய அட்டூழியங்கள் மனிதாபிமானமற்றவை என்றும், ஒரு குடும்பத்தின் கனவுகளையும் எதிர்காலத்தையும் சிதைத்த இவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்றே தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 2026-ஆம் ஆண்டின் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தச் சாலை விபத்து அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version