பிகார் அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக அடிக்கடி பேசப்படுபவர் அனந்தகுமார் சிங். கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்து சிறையில் இருந்தபடியே, மொகாமா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாபெரும் வெற்றி பெற்றது அரசியல் வளாகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மொகாமா சட்டமன்ற தொகுதியில் ஜேடியு வேட்பாளரான சிங், எதிரணி ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் வீணா தேவியை 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றி கண்டார். தேர்தலுக்கு முன்பு ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷியின் உறவினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதால், சிங் சிறையில் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமிகர் சமூகத்தின் ஆதரவால் உறுதியான ஆதிக்கம்
அனந்தகுமார் சிங்கின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் பெற்றுள்ள பூமிகர் மற்றும் உயர் சாதி வாக்குகள் கூறப்படுகின்றன. 1990-களில் லாலு–ராப்ரி ஆட்சிக் காலத்தில் பூமிகர் சமூகத்தினர் பல்வேறு தாக்குதல்களைச் சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அனந்தகுமார் சிங் இருந்ததாக அந்த சமூகத்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இதன் பலனாக, 2005-ஆம் ஆண்டு ஜேடியு சார்பில் போட்டியிட்ட அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார். பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டும் இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.
குடும்பத்தின் இருபது ஆண்டுகால ஆட்சி
2022-இல் சட்டப்பூர்வ தகுதி ரத்து செய்யப்பட்டபோது, அவரது மனைவி நெஹா சிங் அதே மொகாமா தொகுதியில் ஆர்.ஜே.டி வேட்பாளராக வெற்றி பெற்றார். இதனால், கடந்த இருபது ஆண்டுகளாக மொகாமா தொகுதி சிங் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்துள்ளது.
52 குற்றவழக்குகள்… தடுப்புச் சட்டத்திலும் கைது
அனந்தகுமார் சிங் மீது தற்போது கொலை, கடத்தல், ஆயுத சட்டம் உள்ளிட்ட 52 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, 2022இல் அவருக்கு எதிராக தடுப்புச் சட்டம் (UAPA) பிரயோகிக்கப்பட்டது அரசியலிலும் சட்டரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சிறையிலிருந்தபோதும் மக்கள் ஆதரவை இழக்காமல், மீண்டும் மொகாமாவின் அதிகாரத்தை தக்க வைத்திருப்பதன் மூலம், அனந்தகுமார் சிங் பிகார் அரசியலில் „பாகுபலி‟ என அழைக்கப்படுவதற்கான காரணம் மீண்டும் வெளிப்படையாகியுள்ளது.
