தேனி :
தேனி மாவட்டத்தில் காணாமல் போன இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் முல்லைப்பெரியாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பருடன் ஏற்பட்ட தகராறில், ஐபோன் மற்றும் தங்க நகைக்காகவே இந்தக் கொலை நடந்தது என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி நவீன்குமார், அக்டோபர் 6ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு திரும்பி வரவில்லை. இதையடுத்து, அவரது தாய் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் காணாமல்போனதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
விசாரணையின் போது, நவீன்குமார் கடைசியாக தனது நண்பர் குணசேகரனுடன் பைக்கில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குணசேகரனைத் தேடிய போலீசார், அவர் மொபைலை அணைத்து வைத்து தப்பியிருப்பதை கண்டறிந்தனர். சிறப்பு குழு அமைத்து தேடுதல் நடத்தியதில், குணசேகரன் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் குணசேகரன் தெரிவித்ததாவது:
“நவீன்குமாரும் நானும் நண்பர்கள். சில நாட்களுக்கு முன் மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவன் என்னை அவமதித்தான். அதற்காகவே பழி வாங்க வேண்டும் என முடிவு செய்தேன். பின்னர் அவனை மது அருந்தலாம் என்று சொல்லி முல்லைப்பெரியாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அரிவாளால் தாக்கி கொன்றேன். பின்னர் அவனிடம் இருந்த ஐபோனும் மூன்று சவரன் தங்க நகையும் எடுத்துக் கொண்டு உடலை ஆற்றில் வீசி தப்பினேன்,” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தியதில், ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு நவீன்குமாரின் சடலம் முல்லைப்பெரியாற்றில் மீட்கப்பட்டது.
காணாமல்போன வழக்கை கொலை வழக்காக மாற்றிய வீரபாண்டி போலீசார், குணசேகரனை நீதிமன்றக் காவலில் அனுப்பினர். மேலும், இந்தக் கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.