திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் பாக முகவர்கள் மாநாடு நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “அதிமுக மீண்டும் பாஜக-வுடன் ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாகத் தகவல்கள் வந்ததால், கொள்கை ரீதியாக நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, யாருடன் கூட்டணி என்பது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். தற்போதைய நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை; மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான அரசியலையே முன்னெடுக்கிறோம்” என்று தெளிவுபடுத்தினார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “நெல்லையில் பழம்பெருமை வாய்ந்த பொருநை அருட்காட்சியகம் அமைத்ததற்கும், தியாகி காயிதே மில்லத் அவர்களின் பெயரில் நவீன நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்டிபிஐ சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். அதேவேளையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். “தமிழகத்தில் சுமார் 12 லட்சம் வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்களாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தகுதியுள்ள வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கும் நோக்கில் ஆணையம் செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் இணைக்க வரும்போது அதிகாரிகள் அவர்களை அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
பாஜக-வின் தமிழக அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “பாஜக-விற்குத் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய கட்டமைப்பு எதுவும் இல்லை. அவர்கள் ஊடகங்கள் வாயிலாக ஒரு ‘மாய பிம்பத்தை’ உருவாக்கி, தங்களுக்குப் பலம் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். பெரியார் மற்றும் அண்ணாவால் செதுக்கப்பட்ட இந்தச் சமூக நீதி மண்ணில், மதவாத சக்தியான பாஜக ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. தமிழக மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்” என்று நெல்லை முபாரக் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பாக முகவர்கள் பங்கேற்றனர்.














