அரிதான ‘SMA’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பா.ஜ.க மாவட்டத் தலைவர் நிதியுதவி

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிதாஸ் – துர்கா தேவி தம்பதியினரின் பெண் குழந்தை தனன்யா, முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு (Spinal Muscular Atrophy – SMA Type 2) எனும் மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தசை இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் சிதைவடைவதால் ஏற்படும் இந்த நோய்க்கு, உலகிலேயே மிக விலையுயர்ந்த மருந்துகளும் சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், குழந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றோர் தவித்து வந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் கோ.விஜயேந்திரன் அவர்கள் அக்குழந்தையின் இல்லத்திற்கு நேரில் சென்று பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, குழந்தையின் தற்போதைய உடல்நிலை மற்றும் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அவர், தனது தனிப்பட்ட பங்களிப்பாகக் குழந்தையின் முதற்கட்ட சிகிச்சைக்காக நிதி உதவியை வழங்கினார். மேலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் இந்த அரிய வகை நோய்க்கான சிகிச்சையை ஏழை எளிய குடும்பங்கள் எதிர்கொள்வது கடினம் என்பதால், இச்சிறுமியின் நிலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்குக் கொண்டு சென்று, மத்திய அரசின் மூலம் தேவையான உயரிய மருத்துவ உதவிகள் மற்றும் நிதியினைப் பெற்றுத் தர முழு முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.நேதாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சந்தோஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்து குழந்தையின் குடும்பத்தினருக்குத் தார்மீக ஆதரவை வழங்கினர். அரிதான நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கும் பனங்குடி சிறுமிக்கு, அரசியல் கடந்து மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த உதவி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாக்குறுதி, அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version