பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் லாசியன் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொதுமக்களை காப்பாற்ற, இந்திய ராணுவம் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஆகஸ்ட் 27-ம் தேதி ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. உடனடியாக ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், துரித மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, 3 சீட்டா ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டன. அவர்களின் துணிச்சலான செயல்பாடின் பலனாக, சிக்கியிருந்த 27 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ பதிவில், “நெருக்கடியான தருணங்களில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தேவையான உதவிகளையும் ஆதரவையும் எப்போதும் வழங்குவோம்” என்று உறுதியளித்துள்ளது.
மீட்பு பணியில் வீரத்துடன் செயல்பட்டு, மக்களின் உயிரை காப்பாற்றிய ராணுவத்தினருக்கு பொதுமக்கள், அரசு அதிகாரிகள், சமூக வலைதள பயனர்கள் என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.