வடமாநில வழக்கறிஞர் நியமனமும் கோயில் உண்டியல் நிதி சர்ச்சையும் – பக்தர்கள் குமுறல்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம், தற்போது அரசியல் மற்றும் மொழி ரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதை, மக்கள் வழக்கில் இல்லாத இந்திப் பெயர் என்று கூறி திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், அதே வேளையில் திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாதாட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சிங் சின்னா எனும் வடநாட்டு வழக்கறிஞரை அதிக ஊதியம் கொடுத்து நியமித்திருப்பது முரண்பாடாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஆர்.எஸ். பாரதி, கோர்ட் சரவணன் போன்ற சட்ட நுணுக்கம் தெரிந்த திறமையான தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கும்போது, அவர்களைத் தவிர்த்துவிட்டு வெளிமாநில வழக்கறிஞரை நாடியது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கோயில் உண்டியல் பணம் கையாளப்படும் விதம் குறித்துப் பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகவும் நம்பிக்கையோடும் செலுத்தும் உண்டியல் காணிக்கை, கோயிலின் ஆன்மீகப் பணிகளுக்கோ அல்லது பக்தர்களின் வசதிக்கோ பயன்படுத்தப்படாமல், கோயிலின் பாரம்பரிய வழக்கமான ‘தீபம் ஏற்றக் கூடாது’ என்று வாதாடுவதற்காக வடமாநில வழக்கறிஞருக்கு லட்சக்கணக்கில் ஊதியமாக வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “பக்தர்கள் செலுத்தும் பணம், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடுப்பதற்கே பயன்படுத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது” எனப் ஆன்மீகப் பெரியோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், கோயில் உண்டியலில் பணம் செலுத்தும் பக்தர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இதுவெனப் பரவலான கருத்து நிலவுகிறது. கோயில்களில் செலுத்தப்படும் காணிக்கை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அதற்கு மாற்றாக அருகில் இருக்கும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் உண்மையான தேவையுள்ளவர்களுக்கு நேரடியாக உதவுவதே சிறந்த மனிதநேயச் செயலாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் வெறும் வழிபாட்டு உரிமை தொடர்பானதாக மட்டும் இல்லாமல், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் மாநில உரிமை குறித்த பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது.

Exit mobile version