பக்திப் பரவசத்துடன் தமிழகத்தை வலம் வரும் ஆதியோகி ரதங்கள்  மதுரையை வந்தடைந்தது ரத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற மஹாசிவராத்திரி விழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 2026 பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை மற்றும் தமிழகத்தின் மிகப்பழைமையான பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தற்போது தமிழகம் முழுவதும் பக்தி மணம் கமழத் தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள ஆதியோகியை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்களுக்காக, அவர்களின் இருப்பிடத்திற்கே ஆதியோகி தரிசனத்தைக் கொண்டு செல்லும் உன்னத நோக்கோடும், மஹாசிவராத்திரி விழாவிற்குப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கவும் இந்த யாத்திரை ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக, தமிழகத்தின் நான்கு திசைகளிலும் ஆதியோகியின் திருவுருவ ரதங்கள் அந்தந்தப் பகுதியின் முக்கிய ஆதீனக் குருமகாசந்நிதானங்களால் ஆன்மீக நெறிமுறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரை, கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதமானது பாடல் பெற்ற பல்வேறு சிவத்தலங்கள் வழியாகப் பயணம் செய்து நேற்று (டிசம்பர் 25, 2025) தூங்காநகரமான மதுரையை வந்தடைந்தது. மதுரையில் ரதத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சிவபக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்த இரண்டு மாத காலத்திற்கு இந்த ரத யாத்திரை தென் தமிழகத்தின் முக்கியத் திருத்தலங்கள் வழியாகத் தொடர்ந்து நடைபெற உள்ளது. முன்னதாக, மேற்கு மண்டலத்திற்கான யாத்திரையைப் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கடந்த 17-ஆம் தேதி ஆதியோகி வளாகத்தில் தொடங்கி வைத்தனர். அதேபோல், வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையைத் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

ஆதீனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இந்த ரத யாத்திரை, தமிழகத்தின் ஆன்மீகப் பாரம்பர்யத்தையும், சைவ சித்தாந்த நெறிகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதியோகி ரதம் செல்லும் வழியெங்கும் சிறப்பு பூஜைகளும், பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டு ஆன்மீகச் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 15-ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கும் மஹாசிவராத்திரி விழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ள நிலையில், இந்த ரத யாத்திரை அந்த மாபெரும் விழாவிற்கான ஒரு முன்னோட்டமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ரதத்தை வரவேற்கவும், ஆதியோகிக்குத் தங்களின் கரங்களால் தீபாராதனை காட்டி வழிபடவும் சிவபக்தர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.

Exit mobile version