மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்காக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அவ்வப்போது கூடி, விடுவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு, எஞ்சியுள்ள தண்ணீர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் திவருகிறது.
இந்தநிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நாளை கூடுகிறது. பிற்பகல் இரண்டரை மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்திற்கான விவாத நிரலில், மேகதாது அணை விவகாரம் இடம்பெறவில்லை. என்றாலும், இந்த விவகாரத்தை கர்நாடக அரசின் பிரதிநிதி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















