கோவையில் 36 ஆண்டுகால பழைய பில்லூர் குழாய் மீண்டும் உடைப்பு   இரும்பு குழாய் பதிக்கத் திட்டம்

கோவை மாநகரப் பகுதிகளின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் குடிநீர் திட்டத்தில், சரவணம்பட்டி பகுதியில் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குடிநீர் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் பில்லூர் அணையில் இருந்து மூன்று முக்கியத் திட்டங்களின் கீழ் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதில் பில்லூர்-2 திட்டத்திற்காக கடந்த 1989-ஆம் ஆண்டு சுமார் 1,000 மி.மீ. விட்டம் கொண்ட சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டன. தற்போது இக்குழாய்கள் பதிக்கப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவற்றின் உறுதித்தன்மை குறைந்து அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் சரவணம்பட்டியில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்ய 10 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பம்பிங் ஸ்டேஷனில் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, மீண்டும் மின்சாரம் வந்தபோது ஏற்பட்ட தண்ணீர் அழுத்தத்தின் காரணமாகச் சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் இரவு 11:30 மணியளவில் சிமெண்ட் குழாய் வெடித்துச் சிதறியது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகச் சாலைகளில் பெருக்கெடுத்தது. தகவலறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக நீரேற்றத்தை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து, உடைந்த சிமெண்ட் குழாயை அறுத்தெடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக 6 மீட்டர் நீளமுள்ள நவீன இரும்பு குழாயைப் (MS Pipe) பொருத்தும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்குள் இந்தப் பணிகளை முடித்து, மாலைக்குள் மீண்டும் தண்ணீர் விநியோகத்தைத் தொடங்க மாநகராட்சி குடிநீர் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திடீர் பாதிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சரவணம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த உடைப்பால் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் பயன்பெறும் 34 வார்டுகளுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பைச் சமாளிக்கப் பில்லூர்-3 திட்டத்திலிருந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும், அனைத்து வார்டுகளுக்கும் முழுமையாக வழங்க இயலாத சூழல் உள்ளது. இதனால் குடிநீர் விநியோகத்தில் ஒரு நாள் தாமதம் ஏற்படலாம். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக, கரட்டுமேடு முதல் ராமகிருஷ்ணாபுரம் தொட்டி வரையிலான சுமார் 8 கி.மீ. தொலைவிற்குப் பலவீனமான சிமெண்ட் குழாய்களை அகற்றிவிட்டு, முழுமையாக இரும்பு குழாய்களைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான மதிப்பீடு மற்றும் கருத்துரு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் நிரந்தரக் குழாய் பதிக்கும் பணி தொடங்கும்” எனத் தெரிவித்தனர். அடிக்கடி ஏற்படும் இந்தக் குழாய் உடைப்புகளால் அதிருப்தியில் உள்ள பொதுமக்களுக்கு, இந்த புதிய இரும்பு குழாய் திட்டம் பெரும் நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version