அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் பள்ளியில் 12-வது ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களுக்குப் பரிசுகள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் கிரீன் விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 12-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாணவர்களின் உடல் நலத்தைப் பேணுவதோடு, அவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தையும், குழு மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில் இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்குப் பள்ளித் தாளாளர் ராஜா முகமது செட் தலைமை தாங்கி, விளையாட்டுப் போட்டிகளின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். ஆசிரியர் குறிஞ்சி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விஸ்டம் எஜுகேஷன் சொசைட்டி தலைவர் ஆயை. காஜாமைதீன் முன்னிலை வகித்து விழாவைச் சிறப்பித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) காஜா மைதீன் பந்தே நவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மெக்கா தொடக்கப்பள்ளிச் செயலாளர் சாகுல் ஹமீது ஒலிம்பிக் கொடியினையும், ராயல் மொபைல் முகமது சம்சுதீன் பள்ளிக் கொடியினையும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் சுடர் ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஸ்டம் எஜுகேஷன் சொசைட்டி உறுப்பினர்கள் டாக்டர் புரோஸ் கான் நூன், அகமது கபீரா, அகமது யாசிர் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இந்த விளையாட்டு விழாவில் தடகளப் போட்டிகள், தொடர் ஓட்டம் மற்றும் பல்வேறு குழு விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் மாணவர்கள் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்திப் பதக்கங்களை வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். விழாவின் நிறைவாக ஆசிரியர் அப்துல் பாசித் அலி நன்றி கூறினார். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்த விழா, மாணவர்களின் விளையாட்டுத் திறனுக்குப் புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்தது

Exit mobile version