சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் கல்விச்சூழல் சரிவடைந்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாக எதிர்த்துள்ளார்.
நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் விளங்குகிறது. மாநிலக் கல்விக் கொள்கையை எந்த மாநிலமும் எடுக்காத சூழலில், தமிழகம் முதன்முதலாக அதைப் பிறப்பித்துள்ளது. இதைப் பார்த்து தற்போது பல மாநிலங்களும் தங்களுக்கான கல்விக் கொள்கையை உருவாக்க நினைக்கின்றன.
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கும் நாம், அறிவு சார்ந்த விஷயங்களையும் முன்னிறுத்துகிறோம். மாணவர்கள் மாநில ஒருமைப்பாட்டை புரிந்து கொள்ளும் வகையில் கல்வி வழங்கப்படுகிறது. ஆனால், இவற்றைப் பற்றி ஆளுநர் பேசாமல் குறை கூறுவது வருத்தம் தருகிறது. சுதந்திர தினத்தன்று பாராட்டும் வார்த்தைகள் கூறி, மறுபுறம் குறை சொல்வது மத்திய அரசின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட நாளில் குறை கூறுவது, அவரது தரம் என்ன என்பதைக் காட்டுகிறது” என்றார்.
மாநிலக் கல்விக் கொள்கை காழ்ப்புணர்ச்சியால் உருவாக்கப்பட்டது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தது குறித்து அவர், “உலக அரங்கில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்கும் நோக்கிலேயே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களும், தமிழகத்துடன் ஒப்பிடும்போது கல்வித் துறையில் பின்தங்கியுள்ளன. பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் வரலாறு அழிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றார்.
தமிழகத்தில் 27 பள்ளிகள் மூடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு அவர், “எந்த அரசாங்கமாக இருந்தாலும் பள்ளிகளை மூடுவது சாத்தியமில்லை. இது தவறான செய்தி. ஸ்மார்ட்போன், காலை உணவு திட்டம் போன்ற பல அரசுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறைந்தாலும், அதற்குக் காரணம் புலம்பெயர்தல். ஆனால் பள்ளிகளை மூட அரசுக்கு எண்ணமில்லை” என்று விளக்கம் அளித்தார்.