அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன்.
திண்டிவனத்தில் நகராட்சி பெண் கவுன்சிலரின் காலில் ஊழியர் ஒருவர் விழுந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “நகராட்சியில் நடக்கும் வன்முறைகள் சகிக்க முடியாதவை. அச்சுறுத்தல் நடப்பது கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும், “எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், விசிகவை திமுக மெல்ல விழுங்கிவிடும் என்று கூறியுள்ளார். விசிக எளிய மக்களுக்கான, விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான இயக்கம். எங்கள் இயக்கத்தை யாராலும் விழுங்க முடியாது. எங்கள் கட்சி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது என்பதை இபிஎஸ்க்கு நன்கு தெரியும். ஆனாலும் அரசியல் காரணத்திற்காகவே அவர் இப்படிப் பேசினார். எங்கள் மீது அவருக்கு உள்ள கரிசனத்திற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.