பாங்காக் :
தாய்லாந்தின் பாரம்பரிய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிகழ்வு சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், வெறும் 4 வயது இரட்டைக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்யும் நிகழ்வு பதிவாகியுள்ளது.
திருமணமான இரட்டையர்கள் யார்?
தாய்லாந்தின் பிரச்சாயா ரிசார்ட்டில் வசிக்கும் தட்சனாபோர்ன் சோர்ன்சாய் மற்றும் அவரது சகோதரி தட்சதோர்ன் ஆகிய இரட்டைக் குழந்தைகளுக்கு, கடந்த ஜூன் 28ஆம் தேதி குடும்பத்தினரின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. திருமண நிகழ்வின் போது சிறுமி, தனது சகோதரனுக்கு கன்னத்தில் முத்தமிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருமண சடங்குகள், நம்பிக்கைகள்
புத்த மதத்துறவிகள் ஆசீர்வதித்த இந்த நிகழ்வில், இரட்டையர்களின் நெற்றியில் புனித குறியும் இடப்பட்டது. மேலும், குடும்பத்தினர் வரதட்சணையாக நான்கு மில்லியன் தாய் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.90 லட்சம்) மற்றும் தங்க நகைகளையும் வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பின்னணி நம்பிக்கைகள்
தாய்லாந்து மக்கள் சிலர் கொண்டுள்ள பாரம்பரிய நம்பிக்கையின்படி, எதிர்பாலின இரட்டையர்கள் முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் எனவும், அவர்கள் மீண்டும் ஒரே குடும்பத்தில் பிறப்பது தவிர்க்க முடியாதது எனவும் நம்பப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையில் நோய்கள், விபத்துகள் போன்ற தீமைகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து வைக்கப்படுவது வழக்கம். இந்த திருமணம் சடங்கு நோக்கத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது; சட்டபூர்வ அங்கீகாரம் இதற்கு இல்லை.
சமூக வலைதளங்களில் விமர்சனங்கள்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அதனை விசித்திரமாக விமர்சிக்க, சிலர் “இது பாரம்பரியத்தின் ஒரு பகுதி” என ஆதரிக்கின்றனர். குழந்தைகளின் விருப்பம், உரிமை, மனநிலை ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்கிற கோணத்திலும் உரையாடல்கள் உருவாகி வருகின்றன.