100 மில்லியன் பார்வைகளைக் கடந்து ZEE5 தளத்தில் ‘தடயம்’ வெப் சீரிஸ் மெகா ஹிட்: சமுத்திரக்கனியின் மிரட்டலான நடிப்பில் புதிய சாதனை!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ் ‘தடயம்’, வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து ஓடிடி உலகில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. வழக்கமான க்ரைம் த்ரில்லர் பாணியிலிருந்து விலகி, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இந்தத் தொடர், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 1990-களின் இறுதிக்கால தென்னிந்திய கிராமப்புறச் சூழலை அப்படியே கண்முன் நிறுத்தும் இந்தத் தொடர், மர்மமான தொடர் கொலைகளும் அதைத் துப்புதுலக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் போராட்டமுமாக ஒவ்வொரு எபிசோடிலும் அதிரடித் திருப்பங்களுடன் நகர்கிறது.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் இந்தத் தொடரின் மர்மத்தையும் உணர்ச்சிகளையும் மிகச் சரியாகக் கையாண்டுள்ளார். சுமார் 3000 சின்னத்திரை எபிசோடுகளை இயக்கிய அனுபவம் கொண்ட அவர், இந்தத் தொடரின் மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம் தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் நடிகர் சமுத்திரக்கனி தனது முதிர்ச்சியான மற்றும் வலுவான நடிப்பால் கதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருடன் சிவதா (Sivada) உள்ளிட்ட நடிகர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் KK-வின் கிராமத்து அழகியல் மற்றும் இசையமைப்பாளர் விபின் பாஸ்கரின் (Vipin Baskar) அதிர வைக்கும் பின்னணி இசை ஆகியவை இந்தத் த்ரில்லர் அனுபவத்தைத் திரையரங்குத் தரத்திற்கு உயர்த்திப் பிடித்துள்ளன.

‘காக்டெய்ல் சினிமாஸ்’ (Cocktail Cinemas) சார்பில் அஜய் கிருஷ்ணா இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். மகனின் இந்த வெற்றி குறித்துப் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான அழகன் தமிழ்மணி பேசுகையில், “என் மகனை நேரடியாகத் தயாரிப்பாளராக உருவாக்காமல், சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வைத்தேன். இன்று தனது சொந்த முயற்சியால் எவரது உதவியுமின்றி இந்த நிலையை அடைந்திருக்கும் அஜய் கிருஷ்ணாவைப் பார்க்கும்போது ஒரு தந்தையாகப் பெருமைப்படுகிறேன்” என்று நெகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். எடிட்டர் தினேஷ் குமாரின் நேர்த்தியான தொகுப்பு கதையின் வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளது.

இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். “வெளியான சில நாட்களிலேயே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியது மிகப் பெரிய சாதனை” என்று ZEE5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தரமான தொழில்நுட்பம், விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ஆகியவற்றால் ‘தடயம்’ வெப் சீரிஸ், தமிழ் ஓடிடி தளங்களில் தவிர்க்க முடியாத ஒரு வெற்றிப் படைப்பாக உருவெடுத்துள்ளது.

Exit mobile version