வெளிநாடுகளுக்கு தப்பியோடும் குற்றவாளிகளை நாடு கடத்தி இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வருவது தொடர்பான, மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள், சைபர் குற்றவாளிகள், பொருளாதார குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இரக்கம் காட்டக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு வெளியே தஞ்சம் புகுந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது குறித்து நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை அமித் ஷா துவக்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: “இந்த மாநாடு, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் குற்றங்களை தடுக்கும் வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் நடக்கிறது. இந்திய எல்லைக்கு வெளியே இருந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களையும் பயங்கரவாத அமைப்புகளையும் நீதிக்குள் கொண்டு வர மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா தனது எல்லைப் பாதுகாப்பை மட்டுமின்றி சட்ட அமைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. பொருளாதார குற்றவாளிகள், சைபர் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு எந்தவித இரக்கமும் தேவையில்லை.
அவர்கள் மீது விரைவாக விசாரணை நடைபெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும். ஊழல், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவுக்கு வெளியே இருந்து செயல்படும் குற்றச் செயல்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மையுடன் நாம் செயல்பட வேண்டும்,” என்று அமித் ஷா கூறினார்.