ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்த முக்கிய பயங்கரவாதி பாகு கான், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
‘ஆபரேஷன் நவ்ஷெரா நார் IV’ என்ற பெயரில், நவ்ஷெரா நார் அருகே நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையின் போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக பல ஆண்டுகளாக தேடப்பட்ட பாகு கான் அடையாளம் காணப்பட்டார்.
1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த பாகு கான், பயங்கரவாத அமைப்புகளால் “மனித ஜிபிஎஸ்” என அழைக்கப்பட்டார். கடினமான எல்லைப் பகுதிகள் மற்றும் ரகசியப் பாதைகளை முழுமையாக அறிந்திருந்ததால், குரேஸ் செக்டார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகள் வெற்றியடைய அவர் முக்கிய காரணமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல் கமாண்டராக இருந்த பாகு கான், தன் அமைப்பைத் தவிர, பிற பயங்கரவாதக் குழுக்களுக்கும் எல்லை ஊடுருவலில் வழிகாட்டி வந்துள்ளார். இதனால், அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவசியமான நபராக கருதப்பட்ட அவர், இறுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.














