டில்லியில் நடந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை அருகே நடந்த இந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததும், 16 பேர் படுகாயமடைந்ததும் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) விசாரணை தொடங்கி, சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது அறிக்கையில் கூறியதாவது :
“எங்கள் அன்பு நண்பர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் இஸ்ரேல் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதம் எங்களை தாக்கலாம், ஆனால் நமது மன உறுதியையும் ஆன்மாவையும் அசைக்க முடியாது. இந்தியாவும் இஸ்ரேலும் பண்டைய நாகரிகங்களை கொண்ட நாடுகள்; எங்கள் தேசங்களின் ஒளி எப்போதும் தீமையின் இருளை வெல்லும்.”
இதேபோல், ஈரான் வெளியுறவு அமைச்சகமும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பக்காயி, “இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் ஈரான் இணைந்து நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்,” என கூறியுள்ளார்.
டில்லி வெடிப்பின் பின்னணியில் சர்வதேச அளவில் தொடர்ச்சியான கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.


















