திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட முடிவு செய்ததை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று குமரன் சிலை அருகே நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் முன்பே அனுமதி மறுத்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என கருதி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலையை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவருடன் சில பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
