‘வாரணாசி’ விழாவில் தொழில்நுட்ப கோளாறு… உணர்ச்சிவசப்பட்ட ராஜமெளலியின் கருத்து விவாதம் ; போலீஸில் புகார்

ஹைதராபாதில் நடைபெற்ற ‘வாரணாசி’ பட அறிமுக விழாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இயக்குநர் ராஜமெளலியின் மேடைப் பேச்சை சர்ச்சைக்குள் தள்ளியுள்ளது. மகேஷ் பாபு நடிக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கு, ராஜமெளலியின் தந்தை மற்றும் மூத்த எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார்.

விழாவின் டைட்டில் டீசர் வெளியீட்டு நேரத்தில் திடீரென தொழில்நுட்பத் தடை ஏற்பட்டதால் நிகழ்ச்சி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜமெளலி, தனது உரையில் தாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர் அல்ல என்று கூறி, “என் தந்தை அனுமன் எனக்கு வழிகாட்டுவார் என்று சொன்னார். ஆனால் இந்த தவறுகள் நடந்ததும் எனக்கு கோபம் வந்தது; இதுவே வழிகாட்டுதலா?” என்று பேசியதை பலர் பதிவு செய்தனர்.

அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி, ஆந்திராவின் ஒரு பகுதி நெட்டிசன்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஆன்மீகக் கதைகள், கருதுகோள்களுக்கு அங்கிருந்த பாரம்பரிய ஆதரவு தொடரும் நிலையில், ராஜமெளலியின் இந்த கருத்து பொருந்தாதது என்று சிலர் விமர்சித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ராஷ்ட்ரிய வானர சேனா என்ற அமைப்பு, ராஜமெளலியின் உரை மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த சர்ச்சை காரணமாக, ‘வாரணாசி’ பட விழாவில் ஏற்பட்ட சிறிய கோளாறு, பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

Exit mobile version