சிவகாசி : பள்ளிக்குள் மது போதையில் வந்ததை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் அண்மையில் பள்ளிக்கு தாமதமாக வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய ஆசிரியர் சந்திரமூர்த்திக்கு, மாணவர்களிடம் இருந்து மது வாசனை வருகிறது என சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து, “மது அருந்தி வந்தீர்களா?” எனக் கேட்ட ஆசிரியரிடம், மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகம் உறுதியான ஆசிரியர், அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்குக் கூட்டிச் செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மாணவர்கள் அவரை தாக்கி, அவரது தலையை கடுமையாக காயப்படுத்தினர்.
இந்நிலையில் படுகாயமடைந்த ஆசிரியர் சந்திரமூர்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.