டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கில், அந்த விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிலர் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால், ஒரு அரசு நிறுவனத்தின் மீது நேரடியாக நடவடிக்கை எடுப்பது எப்படி நியாயமாகும்?” என்று வாதித்தார்.
இதற்கு எதிராக, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மிகப் பெரும் அளவில் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல் நடந்ததாக உறுதியான தகவல்கள் இருந்ததால் தான் சோதனை நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கில் ED நடத்திய நடவடிக்கை கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது அல்லவா? மாநில அரசு விசாரணை நடத்தவில்லை என்ற சந்தேகத்தின் பேரில் உடனே ED தலையிடுவது எவ்வாறு சரி? சட்டம் மற்றும் ஒழுங்கு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், “டாஸ்மாக் அலுவலகத்தில் மூன்று நாட்கள் சோதனை நடந்தபோது அதிகாரிகளை அடைத்து வைத்தீர்களா?” எனவும் கேள்வி கேட்டனர். இதற்கு, “அதிகாரிகளை அடைத்து வைத்ததாகவும், இரவில் பெண் அதிகாரிகளை விசாரித்ததாகவும் கூறப்படுவது முழுக்க பொய்யானது” என ED வழக்கறிஞர் மறுத்தார்.
பின்னர் வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதிகள், “இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா?” என கேட்டனர். இதற்கு, “அவர் பணமோசடி தொடர்பான வேறு வழக்கில் கைது செய்யப்பட்டார்; இந்த வழக்கில் அவர் பெயர் ஆவணங்களின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவரை கைது செய்யும் எண்ணம் இல்லை” என ED தரப்பு தெரிவித்தது.
இறுதியாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ED சட்டப்பிரிவு தொடர்பான சீராய்வு மனுக்கள் முடிந்தபின், வழக்கை விசாரிக்கலாம்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் மீதான ED விசாரணைக்கான தடையை நீட்டித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.