ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் பெயரை, ராஜ் பவனில் இருந்து, மக்கள் பவனாக மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய ஆர்.என்.ரவி, இந்த பரிந்துரையை செய்திருந்தார்.
இதனை ஏற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இனி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை, ராஜ்பவனுக்கு பதிலாக “மக்கள் பவன்” என அழைக்கலாம் என்று, அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த முயற்சி, ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல் என தெரிவித்துள்ள திருஞான சம்பந்தம், கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜ்பவன் என்பது காலனித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்துவதால், ‘மக்கள் பவன்” என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
