தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள காரணம்பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கழக மாவட்டங்கள் மற்றும் 39 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து திரண்ட சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், கருப்பு – சிவப்பு நிற ஆடைகளில் அணிவகுத்து நின்றது ஒரு ‘பெண் சக்திக் கடல்’ போல காட்சியளித்தது. இந்த எழுச்சிமிக்க மாநாட்டிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமை தாங்கினார். மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநாட்டுத் திடலுக்குத் திறந்த வாகனத்தில் வந்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை, திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்கள் கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர். மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், “பெண்கள் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி” என்று முழக்கமிட்டார். தனது உரையில் மத்திய பாஜக அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்த அவர், நாடு முழுவதும் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இத்திட்டத்தில் 86 சதவீதம் பெண்கள் பயன்பெற்று வந்த நிலையில், அதனை முடக்கியது பெண்களுக்கு எதிரான துரோகம் என்றும், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது வேதனைக்குரியது என்றும் அவர் பேசினார். பாஜக பெயரளவிற்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டு, அதனை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர், விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்கள் 900 கோடி முறை இலவசமாகப் பயணம் செய்துள்ளதையும், காலை உணவுத் திட்டம் மூலம் 19 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதையும் பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.92 லட்சம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், “இது பெண்களுக்கான ஆட்சி” என்று உரக்கச் சொன்னார். வரவிருக்கும் தேர்தலில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைய வேண்டும் என்றும், அப்போது தற்போதுள்ள மகளிர் நலத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

















