தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தயாரிப்புகளை உலகத்தரம் வாய்ந்த சந்தைக்குக் கொண்டு செல்லவும் ‘சாரஸ்-2025’ மதி கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. கொடிசியாவின் ‘டி’ அரங்கில் நடைபெற்று வரும் இக்கண்காட்சி, தமிழகத்தின் கலைப் பாரம்பரியத்தையும், மாவட்டங்களுக்கே உரித்தான பிரத்யேக உற்பத்திப் பொருட்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பைப் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. சுமார் 10 இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் குழுக்கள் என மொத்தம் 172 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக மாவட்டங்களின் மகளிர் குழுக்களுக்காக 113 அரங்குகளும், பிற அரசுத் துறைகளின் தயாரிப்புகளுக்கென 10 அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற மற்றும் பிரத்யேகப் பொருட்கள் அணிவகுக்கின்றன. காஞ்சிபுரம் மற்றும் ஆரணியின் கண்கவர் பட்டு ரகங்கள், தஞ்சாவூரின் கலைநயமிக்க தலையாட்டி பொம்மைகள் மற்றும் கண்ணாடி ஓவியங்கள், பத்தமடையின் மதிப்புக்கூட்டப்பட்ட கோரைப் பாய் பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. உணவுப் பொருட்கள் பிரிவில், உடன்குடியின் மணமிக்க கருப்பட்டி, கோவில்பட்டி கடலைமிட்டாய், அரியலூர் மற்றும் கடலூரின் தரமான முந்திரிப் பருப்புகள், நாமக்கல் கொல்லிமலையின் காரம் மிகுந்த மிளகு எனத் தமிழகத்தின் ருசிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும், ராமநாதபுரத்தின் பனை ஓலைப் பொருட்கள், திருப்பூர் மற்றும் செட்டிநாட்டின் பருத்தி ஆடைகள் எனப் பன்முகத்தன்மை கொண்ட தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விற்பனை மட்டுமின்றி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தொழில்முனைவோர் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சந்தைப்படுத்தும் உத்திகள் (Marketing Strategies), டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பேக்கேஜிங் முறைகள் குறித்துப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடிப் பயிற்சி அளித்து வருகின்றனர். வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிக்கவும், மகளிர் குழுக்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கவும் கோவை மக்கள் பெரும் திரளாக இக்கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
