காப்புரிமை தாக்கலில் தமிழ்நாடு முதலிடம் : முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் காப்புரிமை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து, அறிவுசார் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, நாட்டளவில் தாக்கல் செய்யப்பட்ட 68,201 காப்புரிமை விண்ணப்பங்களில், தமிழ்நாடு மட்டும் 15,440 காப்புரிமைகளை பதிவு செய்து, மொத்த காப்புரிமைகளில் 23 சதவிகித பங்கைக் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு, நாட்டின் அறிவுசார் சொத்துரிமை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் “அறிவுசார் தலைநகரம்” என்ற தனது நிலையை தமிழ்நாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023–24 நிதியாண்டில் 9,565 ஆக இருந்த காப்புரிமை பதிவுகள், 2024–25 நிதியாண்டில் 15,440 ஆக உயர்ந்துள்ளன. இது 62 சதவிகித வளர்ச்சியை காட்டுவதாகவும், மாநிலத்தில் உள்நாட்டு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சிகள் வேகமாக வளர்ந்து வருவதை இது பிரதிபலிப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம், இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்பு துறையில் தமிழ்நாடு ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version