சென்னை : தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத்தில், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உள்ளிட்ட 8 பேரின் மறைவுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்பின் 2025-26ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியதை குறிப்பிடத்தக்கது. அப்போது ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சர்ச்சை கிளம்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 4 நாட்கள் விவாதிக்கப்பட்டது.
மேலும், மார்ச் 14ஆம் தேதி மாநில பட்ஜெட், மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. மார்ச் 17 முதல் 21 வரை பொதுவான பட்ஜெட் விவாதம், மார்ச் 24 முதல் ஏப்ரல் 29 வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றன. மொத்தம் 55 துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் முடிந்தபின், கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதிகளின்படி ஆறு மாத இடைவெளிக்குள் மீண்டும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால், தற்போது அக்டோபர் 14ஆம் தேதி கூட்டம் தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற இருப்பதால், இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.