தமிழகம் தனியாக போராடி வருகிறது ! ஆளுநருக்கு காலக்கெடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையறைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் பல முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் காலதாமதம் செய்வதாகக் கூறி, தமிழ்நாடு அரசு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ஒரு மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதுகுறித்து 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக் குறிப்பு அளித்திருந்தார். அந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குட்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் பல மாநிலங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், ஆளும் கட்சிகள் கொண்ட மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அதனை வரவேற்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு மீதான நடவடிக்கைகளை ஏற்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.

இதற்கிடையே வாதம் முன்வைத்த பி. வில்சன், “இந்த விவகாரத்தில் தமிழகம் நீண்ட காலமாகவே தனியாக போராடி வருகிறது. ஆளுநரால் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது. ஒரு மசோதா என்பது அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடு மட்டுமே; அதன் சட்டபூர்வ தன்மையை ஆராய்வது ஆளுநரின் கடமையல்ல. ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும், அவரது நடவடிக்கைகள் சட்டபூர்வமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது” என்று வாதிட்டார்.

மேலும், “மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டால், மாநிலங்கள் நீதிமன்ற கதவுகளை அடிக்கடி தட்ட வேண்டியிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் சீரான செயல்பாடும், நீதிமன்ற மறுஆய்வும் நாட்டுக்கு அவசியம்” என வலியுறுத்தினார்.

Exit mobile version