சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம் : 4 பேர் பலியான சோகம் !

சத்தீஸ்கரில் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவருடன் மனைவி பவித்ரா (38), மகள் சவுத்தியா (8), மகள் சவுமிகா (6) ஆகியோருடன் ராய்ப்பூர் மாவட்டம் ஜகல்பூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜேஷ்குமார் குடும்பத்தினர் காரில் சொந்த ஊருக்குப் பயணம் தொடங்கினர். அப்போது சுக்மா அருகே டர்பந்தனா பகுதியில் திடீரென ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் கார் சிக்கியது. வினாடிகள் கணக்கில் காரை நீர் அடித்துச் சென்றது.

இதனால், கார் உள்ளே சிக்கிய ராஜேஷ்குமார், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் கரையோரம் அடித்துச் சென்ற காரிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின், உடல்களை சொந்த ஊரான பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்களில் கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version