வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கி உள்ளார் தமிழக முதல்வர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதில், பிற மாநில முதல்வர்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
“முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பியப் பயணத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் பாஜக சார்பில் வரவேற்கத் தயாராக உள்ளோம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக அறிவித்தாலும், இதுவரை அதன் பலன் என்ன என்பதை மக்கள் அறியவில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

அவர் தொடர்ந்து,
“உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வெளிநாடு செல்லாமல் இருப்பினும் 7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் டாவோஸ் பயணத்தில் மட்டும் 15 லட்சம் கோடி முதலீடுகளை மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழகத்தின் வெளிநாட்டு பயணங்கள் பெரும்பாலும் ‘காகித உடன்படிக்கைகள்’ அளவிலேயே முடிந்து விட்டன.

2022-ல் துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக கூறப்பட்டும், மூன்று ஆண்டுகள் கடந்தும் அவை நடைமுறைக்கு வரவில்லை. அதேபோல் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான பயணங்களிலும் உறுதியான முன்னேற்றம் இல்லை. 2024-ல் அமெரிக்கப் பயணத்தின் போது ரூ.7,500 கோடி மதிப்பில் 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரே ஒரு தொழிற்சாலை மட்டுமே கட்டுமானம் துவங்கியுள்ளது” என்று கூறினார்.

மேலும்,
“வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக விளம்பரம் செய்வதை விட, மாநிலத்திலுள்ள அரசு துறைகளின் காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கினாலே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் ஒழுங்கைச் செம்மைப்படுத்தி, ஊழல் முறைகேடுகளை ஒழித்தால் பன்னாட்டு நிறுவனங்களே தமிழகத்திற்குத் தானாக வருவார்கள். ஆனால் இவற்றைச் செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால் யாருக்கும் பயன் இல்லை” என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version