காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு எழுப்பிய 14 முக்கிய கேள்விகள்!

புதுடில்லி : சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு குறித்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திடம் 14 முக்கிய ஆலோசனைக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதிக்கிறார் என்று குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், “கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு மூன்று மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் கடைசி தேதி நிர்ணயித்தது.

இந்த தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் வரம்புகளைக் கடக்கிறதா என்ற கேள்வியுடன், ஜனாதிபதி திரௌபதி முர்மு, அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் ஆலோசனை கோரியுள்ளார். இதற்காக, சட்ட ரீதியான விளக்கங்கள் தேவைப்படும் 14 கேள்விகளை நீதிமன்றத்திடம் வைத்துள்ளார்.

அந்த கேள்விகளில் முக்கியமானவை:

  1. கவர்னரிடம் மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன?
  2. அமைச்சரவையின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
  3. கவர்னருக்கு தனிச்சட்ட உரிமை ஏற்கத்தக்கதா?
  4. 361வது பிரிவு, 200வது பிரிவை மீறினால் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
  5. நீதிமன்ற உத்தரவால் காலக்கெடு விதிக்க முடியுமா?
  6. ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்கத்தக்கதா?
  7. ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
  8. ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து ஆலோசனை கோர வேண்டியதா?
  9. மசோதா சட்டமாகும் முன் நீதிமன்ற விசாரணை சாத்தியமா?
  10. 142வது பிரிவின் கீழ், உத்தரவு பிறப்பிக்க முடிவதா?
  11. கவர்னர் ஒப்புதல் இல்லாமல் சட்டம் அமலுக்கு வர முடியுமா?
  12. அரசியல் சட்டக் கேள்விகள் எழும்போது, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கட்டாயமா?
  13. 142வது பிரிவு வழியாக அரசியல் சட்டத்துக்கு முரணான உத்தரவு செல்லுமா?
  14. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான விவகாரத்தில், 131வது பிரிவைத் தவிர நீதிமன்ற அதிகாரம் என்ன?

இந்த 14 கேள்விகளும், மத்திய அரசும் மாநில அரசும் இடையே உருவாகும் அதிகாரச் சிக்கல்கள், அரசியல் சட்டத்தின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றத்தின் எல்லைகள் குறித்து ஒரு முக்கிய வழிகாட்டி ஆகக்கூடும்.

Exit mobile version