ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

“உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை விட மேலானது அல்ல; இரண்டும் அரசியலமைப்பில் சமமானவை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் உரையாற்றியதாவது :

“நீதிபதிகள் நியமனத்தில், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றமே முதல் முடிவை எடுக்க வேண்டும். ஒருவரை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற கொலீஜியத்துக்கு உத்தரவிட முடியாது. நாங்கள் பெயர்களை பரிந்துரைத்து, அவற்றை பரிசீலிக்குமாறு மட்டுமே கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் திருப்தியடைந்த பின் மட்டுமே அந்த பெயர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வரும்.

இரண்டு நீதிமன்றங்களும் அரசியலமைப்பின் அடிப்படையில் சமமானவை; ஒன்றுக்கு மற்றொன்று மேலோ, கீழோ அல்ல.”

மேலும், நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவை உருவாக்குவது இன்னும் நிறைவேறாத பணியாக இருப்பதாகவும், “நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரின் கடமை என்பது சட்டத்தை விளக்குவது மட்டுமல்ல; ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநிறுத்தி பாதுகாப்பதும் ஆகும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

சுப்ரீம் கோர்ட்டில் பணிபுரியும் வக்கீல்களை, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நேரடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version