கொடிக்கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

அரசியல் கட்சிகள் அனுமதி இன்றி சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட், அவற்றை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை நடைபெற்றபோது, ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 4 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வழக்கை விசாரித்து, விரிவான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது.

Exit mobile version