அரசியல் பிரச்சனைகளில் அமலாக்கத்துறை (ED) பயன்படுத்தப்படுவதை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், “அமலாக்கத்துறையை தேர்தல் மேடையாக மாற்ற வேண்டாம்,” என எச்சரித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்புடைய ‘மூடா’ ஊழல் வழக்கில், இதுவரை ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறை மூலம் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் தலைமை நீதிபதி கூறுகையில் :
“தயவு செய்து எங்களை வாய் திறக்க வைக்காதீர்கள். இல்லையெனில், அமலாக்கத்துறையைப் பற்றி கடுமையான கருத்துகளை கூற வேண்டிய நிலை வரும். மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அனுபவங்களை நாங்கள் மறக்கவில்லை. நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் பிரச்சனைகளில் EDயை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அரசியல் பிரச்சனைகள் தேர்தல் மேடையில் தீர வேண்டியவை.”
இந்தக் கருத்துகளுடன், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.