2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்திரை” மேற்கொண்டு, நாடு முழுவதும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அப்போது அவர், “அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது” எனவும், இந்திய ராணுவத்தினரின் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்திருந்தது.
இவ்வகை பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உத்தரப்பிரதேச மாநில சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கை அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, ராகுல் காந்தி அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். எனினும், அவரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிமன்றம் ராகுல் காந்தியின் பழைய பேச்சுகளை பரிசீலித்தபோது, “நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி பேசமாட்டீர்கள்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.