தமிழகத்தில் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்ததை விட அதிகமாக வழங்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவை இன்று அவர் தொடங்கி வைத்தார். விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஒவ்வொரு அரங்கின் சிறப்புகளையும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்வில் உரையாற்றிய அவர், “பல துறைகளில் தமிழக அரசு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளை ஆதரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்வழி உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும், உணவு தானிய உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
